ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்போவதாக வெளியான செய்திக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. பால் விலையை உயர்த்த தமிழக அரசிடம் ஆவின் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆவின் நிறுவனம், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலன், கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருவதாகவும், பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்ததாக வெளியான செய்தி தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஆவின் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments are closed.