ஆடி அமாவாசை: திருச்சி அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்…!
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு...

தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள், நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்தவகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல, திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி திரளான மக்கள் திரண்டு முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.