தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, முகநூலில் ஒரு நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
அவர், அந்தப் பெண்ணுக்கு பரிசு விழுந்திருப்பதாகவும், அந்த பரிசு பார்சலை பெறுவதற்கு சர்வீஸ் சார்ஜ், டெலிவரி சார்ஜ், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றுக்கு பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண் பல தவணைகளாக பணம் செலுத்தும் செயலிகள் மூலம் மொத்தம் ரூ.38 லட்சத்து 19 ஆயிரத்து 300 அனுப்பியுள்ளார். ஆனால், பார்சல் வந்து சேரவில்லை. சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த முத்து (32) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த முத்துவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுபவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.