அரசு வேலை வாங்கித் தருவதாக பெண் உள்பட 5 பேரிடம் ரூ.17 லட்சம் மோசடி: போலி ஆணை வழங்கிய டாக்டருக்கு வலை…!
நாமக்கல் மாவட்டம், முத்து காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அரசு உதவியாளர் வேலைக்கு முயற்சி செய்தார். அப்போது துறையூரை சேர்ந்த செந்தில்குமார் அறிமுகமானார். அவர் திருச்சி அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் அரசு டாக்டர் பழனிபாரதி மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார். இதை நம்பிய அந்த பெண் முதல் கட்டமாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து செந்தில்குமார் மற்றும் பழனிபாரதியிடம் கொடுத்தார். இதை வாங்கிய இருவரும் வேலை கிடைத்து விடும் என்று தொடர்ந்து கூறி வந்தனர். டாக்டர் பழனிபாரதி சில மாதங்களுக்கு முன்பு அரசு பணி ஆணை ஒன்றை வழங்கி பணியில் சேருமாறு அந்த பெண்ணிடம் கொடுத்தார். அது மோசடி ஆணை என்று தெரியவந்தது. இதற்கிடையே டாக்டர் பழனிபாரதி மோசடி வேலைகளில் ஈடுபடுவதாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரிய வரவே அவரை பணியில் இருந்து விடுவித்தனர். இந்நிலையில் தான் ஏமாந்தது குறித்து அந்த பெண் திருச்சி சிட்டி, பொது அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை (46) கைது செய்து சிறையில் அடைத்தனர். டாக்டர் பழனிபாரதியை வலைவீசி தேடி வருகின்றனர். பழனிபாரதி இதுபோல மேலும் 4 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் வரை மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும், அவர் வேறு யாரிடம் எல்லாம் மோசடி செய்தார் என்பது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.