Rock Fort Times
Online News

கால்பந்து வரலாற்றில் முதல்முறை: உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ‘சாம்பியன்ஷிப் மோதிரம்’ வழங்க முடிவு…!

அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற இந்த உலகளாவிய கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டிக்கு, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும், முன்னாள் சாம்பியனான ஸ்பெயினும் தகுதி பெற்றுள்ளன. சர்வதேச கால்பந்தின் இரு ஜாம்பவான்கள் மோதுவதால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, உலகக் கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்களுடன், வரலாற்றிலேயே முதல்முறையாகப் பிரத்யேக சாம்பியன்ஷிப் மோதிரங்களும் வழங்கப்படும் என்று ஃபிஃபா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபிஃபா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க விளையாட்டுத் துறையின் மிகவும் பிரபலமான மரபுகளில் ஒன்றான இந்த மோதிர முறையை, உலகளாவிய கால்பந்து விளையாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த சாம்பியன்ஷிப் மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மோதிரத்தின் ஒரு பக்கத்தில் ஃபிஃபா உலகக் கோப்பையின் வடிவமும், மறுபக்கத்தில் வெற்றி பெறும் அணியின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் இது தயாரிக்கப்படவுள்ளது. மேலும், இந்த உலகக் கோப்பையைக் குறிக்கும் வகையில் மொத்தம் 2,026 மோதிரங்கள் மட்டுமே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும். இதில் 30 மோதிரங்கள் வெற்றி பெறும் அணியினருக்கு வழங்கப்படும். மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்காக அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற தயாரிப்பாக விற்பனை செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்