திருச்சி அருகே துணிகர சம்பவம்: டிரைவர் சாப்பிட சென்றிருந்த நேரத்தில் லாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் கொள்ளை…!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ரமணி. தொழிலதிபர். இவர் தனக்கு சொந்தமான லாரியில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு காய்கறிகளை அனுப்பி வருகிறார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் டிரைவராகவும், கணக்காளராக லோகேஸ்வரனும் பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் வழக்கம் போல லாரியில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் சென்றனர். அங்கு காய்கறிகள் விற்ற வகையில் வசூலான
ரூ.40 லட்சத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை காவல்காரன் பாளையம் அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு கடையில் சாப்பிட இருவரும் சென்றனர். அப்போது இளைஞர் ஒருவர் உங்கள் லாரியை சிலர் உடைக்கிறார்கள் என்று கூறவே, இருவரும் பதறி அடித்துக் கொண்டு லாரியை நோக்கி ஓடினார்கள். அப்போது 8999 பதிவு எண் கொண்ட காரில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் பயங்கர ஆயுதங்களால் அவர்கள் இருவரையும் மிரட்டி லாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு காரில் ஏறி வேகமாக தப்பி சென்று விட்டனர். காவல்கார பாளையத்திலிருந்து முக்கொம்பு வழியாக திருச்சி சென்றால் சுங்கச்சாவடியில் உள்ள கேமராவில் சிக்கிக் கொள்வோம் என்பதால் நங்கவரம் பகுதி வழியாக கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி டிரைவர் ஆனந்த், கணக்காளர் லோகேஸ்வரன் இருவரும் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி பாலச்சந்தர் மற்றும் பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் வந்த வாகன பதிவு எண் போலியானது என்பது தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். கும்பகோணத்தில் வசூலான லட்சக்கணக்கான பணத்துடன் இருவரும் லாரியில் செல்வதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.