Rock Fort Times
Online News

மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டால்தான் சர்வதேச அளவில் முன்னேற்றம் காண முடியும்-சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனர் ஜெனரல் பேச்சு…!

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) 20வது பட்டமளிப்பு விழா நடந்தது.  1054 இளநிலை, 523 முதுநிலை மாணவர்கள், 53 கட்டிடக்கலை, 197 முனைவர் உள்ளிட்ட  2 ஆயிரத்து 173 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.  பட்டம் பெற்ற மாணவர்களை பாராட்டி டில்லி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழு (சிஎஸ்ஐஆர்) இயக்குனர் ஜெனரல் கலைச்செல்வி பேசுகையில், சர்வதேச அளவில் அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி, நிலத்தடி நீர், தாதுக்கள், மனித வளம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. கல்வி, சமுதாய முன்னேற்றம் தந்த பெற்றோர், ஆசிரியர்களை எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் மறந்து விடக் கூடாது. பட்டம் பெற்றதுடன் பணி முடிந்ததாக நினைக்காமல் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டால்தான் சர்வதேச அளவில் முன்னேற்றம் காண முடியும். தொழில்நுட்பத்திற்காக எந்த நாட்டையும் எதிர்பார்க்காத நிலையில் இந்தியா வளர்ச்சியை நோக்கி வெற்றி நடை போடுகிறது.  கடந்த 3 ஆண்டாக பொறியியல், கலை, அறிவியல் துறையில் முதுநிலை மாணவர்களுக்கு சிறந்த பணி கிடைத்த நிலைமை மாறி தற்போது இளநிலை மாணவர்களுக்கும் கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பிறப்பால், வளர்ப்பால் இந்தியராக இருப்பதை விட நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட சூளுரை ஏற்க வேண்டும். 60 சதவீதம் ஆக்ஸிஜன் வெளியிடும் கடல், இயற்கை பேரழிவு, கார்பன் வெளியீடு ஆகியவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.  திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பாறைகள் இமயமலை பாறைகளை விட பழமையானது. சமுதாய வளர்ச்சியில் மாணவர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.

என்ஐடி இயக்குனர் அகிலா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசுகையில், கடந்த ஆண்டு சர்வதேச அளவில் நிலவிய தொழில் மந்த நிலையிலும் என்ஐடியில் ஆயிரத்து 450க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிறந்த நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள என்ஐடிகளில் திருச்சி என்ஐடி முதலிடத்தையும், தேசிய அளவில் பொறியியல் கல்லூரி தர வரிசையில் 9வது இடம், கட்டிடக்கலை துறையில் 4வது இடம், மேலாண்மை துறையில் 35வது இடம், ஆராய்ச்சி துறையில் 22வது இடத்தை திருச்சி என்ஐடி பெற்றுள்ளது. படிக்கும்போது தொழில்முனைவோர், ஆராய்ச்சி மேற்கொள்ள செல்லும் மாணவர்கள் மீண்டும் வந்து தங்கள் கல்விவியை தொடரும் வாய்ப்புகள் இங்கு வழங்கப்படுகிறது. இக்னைட் அமைப்பு மூலம் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. திருச்சி என்ஐடி மாணவர்களுக்கு கல்வி போதிப்பதுடன் சமுதாய வளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் தாமரைசெல்வன், டீன் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், வீரப்பன், பேராசிரியர்கள் பக்தவச்சலம், நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்