Rock Fort Times
Online News

சந்தனப் பேழையில் உறங்கும் கருப்பு வைரம்… 72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்….

தே.மு.தி.க. நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (28-12-2023) காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு இடபற்றாக்குறை காரணமாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனால், அவரது உடலை கட்சி அலுவலகத்துக்கு எடுத்து வர கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அங்கும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக சென்னை தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்து அஞ்சலி செலுத்தினர். அங்கு ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் மற்றும் திரைப்பட பிரபலங்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை   மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அவருக்கு அஞ்சலி செலுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் திரைப்பட பிரபலங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்ததால் அவரது இறுதி ஊர்வலம் புறப்படுவதில் தாமதம் ஆனது. பின்னர், தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அந்த வாகனத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மைத்துனர் சுதீஷ், தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் இருந்தனர். அவர்கள் பொதுமக்களை பார்த்து கும்பிட்டபடி வந்தனர். இறுதி ஊர்வலத்தின் போது சாலையின் இருபுறமும் குவிந்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அவர் மீது மலர்களை தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் , விஜயகாந்தின் உடல் மாலை 5-45 மணி அளவில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தை வந்தடைந்தது. பின்னர் அவரது உடல் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. அந்த சந்தனப் பேழையில் தலை மற்றும் கால் பகுதியில் “கேப்டன்” என்றும், வலது, இடது புறங்களில் நிறுவனத் தலைவர் தேமுதிக, புரட்சி கலைஞர் விஜயகாந்த் மற்றும் பிறப்பு, இறப்பு தேதி ஆகியவை பொறிக்கப்பட்டிருந்தன. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 72 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஓ பன்னீர்செல்வம், ஜி.கே வாசன், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்