Rock Fort Times
Online News

திருச்சியிலும் கருணாநிதி நூலகம் அமைக்க வலியுறுத்தப்படும்…!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு..

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், பொதுநூலகத்துறை சார்பில் நடத்தப்பட்ட உலக புத்தக தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மைய நூலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

தமிழகத்தில் முதல்வர்களாக பணியாற்றியவர்களில் கருணாநிதியை போன்று வேறு யாரும் நூலகத்துக்கு என பிரத்யேக கவனம் செலுத்தவில்லை. ஆசியாவிலேயே சிறந்த நூலகத்தை சென்னையில் அமைத்துக் கொடுத்தவர் கருணாநிதி. அவரது வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு பரிசாக வந்த புத்தகங்கள் அனைத்தையும் பொது நூலகங்களுக்கு வழங்கி வருகிறார். மதுரையில் தென் தமிழகத்துக்கான அறிவுசார் மையமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூலகம் நாளை ( 15.07.2023 ) திறக்கப்படவுள்ளது. சான்பிரான்சிஸ்கோ நாட்டில் உள்ள நூலகத்துக்கு இணையாக இந்த நூலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களும், பொதுமக்களும் அவசியம் ஒருமுறையாவது இந்த நூலகத்தைப் பார்வையிட வேண்டும். தென் தமிழகத்துக்கு அறிவுசார் மையம் வழங்கியதைப் போன்று, டெல்டா மாவட்டங்களுக்கான அறிவுசார் மையத்தை தமிழகத்தின் மத்திய பகுதியாக விளங்கும் திருச்சியில் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமார் பேசுகையில், திருச்சி மாவட்ட மைய நூலகமானது 45 ஆயிரம் சதுர அடியில், 1.5 லட்சம் புத்தகங்கள், 55 ஆயிரம் உறுப்பினர்கள், 800 வாசகர்களுடன் மாவட்ட மக்களுக்கு அறிவுப் பசியை தீர்த்து வைப்பதுடன், போட்டித் தேர்வர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார். இந்த நிகழ்வில், உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களின் சிறந்த புத்தகங்களான திருச்சிராப்பள்ளி ஊரும்-வரலாறும் நூல் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, மெளனம் பேசும் கடல் அலைகள் நூலாசிரியர் தமிழினியன், இந்திய விடுதலை போரில் தமிழகம் எனும் நூல் ஆசிரியர் சு. முருகானந்தம், வாருங்கள்-வெல்வோம் நூல் ஆசிரியர் அருணா ஹரிதை, முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நூல் ஆசிரியர் திருக்குறள் தாமரை ஆகியோருக்கு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், உலக புத்தக தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும், புத்தகம் என்ன செய்யும் எனும் வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மைய நூலக வளாகத்தில் ரூ.5 லட்சத்தில் படிக்கும் கூடம் கட்டித்தந்த ரவுண்ட் டேபிள் அமைப்பு நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில், திருச்சி மாநகராட்சி மண்டலத் தலைவர் மு. மதிவாணன், வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி, துணைத் தலைவர் நன்மாறன், ஆலோசகர் அருணாச்சலம், இணைச் செயலர் லால்குடி முருகானந்தம், ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் ராஜவேல், சிதம்பரம், கலா சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்