Rock Fort Times
Online News

மணல் லாரிகளால் பெரும் பாதிப்பு; பொதுமக்கள் மறியல் போராட்டம்…!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் திருவளர்ச்சோலை மற்றும் உத்தமர்சீலி ஆகிய 2 இடங்களில் அரசின் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரியில் 24 மணி நேரமும் மணல் அள்ளபட்டு வருகிறது. இதனால் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் குவாரிக்குச் செல்லும் லாரிகள் திருச்சி -கொள்ளிடம் சாலைகளை ஆக்கிரமித்து கொண்டு அணி வகுத்து நிற்கின்றன. இதனால் உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடு, திருவளர்ச்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மணல் லாரிகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மணல் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுவதும், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று திருவளர்ச்சோலை பகுதியில் மணல் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி கூட்டத்தை கலைத்தனர். இது போன்ற சம்பவம் இனியும் நீடித்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடுவோம், மணல் குவாரியை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, பொதுமக்கள் கூறி சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்