திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலை நிகழ்ச்சி மற்றும் 100 அடி உயரம் கொண்ட கட்சி கொடி கம்பம், கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு கட்சியின் 100 அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் மேம்படுத்திட கருணாநிதி எண்ணற்ற திட்டங்களை தீட்டினார். கொள்கையோடு இருக்கும் தி.மு.க.வை சிலர் சீண்டிப்பார்க்கிறார்கள், அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது, தி.மு.க.செய்தி தொடர்பு இணைச் செயலாளர் சல்மா, திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க.செயலாளரும், மண்டல குழு தலைவருமான மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், சபியுல்லா, குணசேகரன், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சீரங்கன், வையம்பட்டி ஒன்றிய குழு தலைவர் குணசீலன், வக்கீல் கிருஷ்ணகோபால் மற்றும் மாநில, மாவட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.