Rock Fort Times
Online News

செபி பொருள் வலை கருவி பொருத்தும் நூறாவது அறுவை சிகிச்சை…

திருச்சி அரசு மருத்துவமனை..

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவின் நூறாவது செபி பொருள் வலை கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை  இன்று ( 19.06.2023 ) நடைபெற்றது. நூறாவது அறுவை சிகிச்சையினை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் பங்கேற்று அறுவை சிகிச்சையினை செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர்…
உலக அளவில், பிறவி ஊனங்களில் மிகவும் அதிகமாக உள்ளது என்றால் அது காது கேளாமை தான். இந்த காது கேளாமை என்பது இரட்டை ஊனங்களுக்கு வழிவகுக்கும். காது கேட்காத குழந்தையால் வாய் பேச முடியாது. ஒரு குழந்தை பிறக்கும் போது இந்த உலகில் உள்ள அனைத்து ஒலிகளும் காது மூலம் உள்ளே சென்று குழந்தையின் மனதில் அது பதிவு ஆன பிறகு மொழியாக வெளியே வரும். இதனால் ஒரு குழந்தையின் மொழி வளர்ச்சி என்பது பாதிக்கப்படுவதோடு அந்த குழந்தையின் அறிவுத்திறனும் பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் ஆயிரம் குழந்தைக்கு ஆறு குழந்தைகள் இது போன்ற காது கேளாத ஊனத்தால் பிறக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் உறவுமுறை திருமணம் தான், உலக அளவில் காது கேளாத ஊனத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றாா். மேலும் இதுவரை தமிழகத்தில் 5300 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு செவி சுருள் வலை கருவி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்களுக்கான பேச்சு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால் இது முற்றிலும் இலவசமாக கலைஞரின் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று கூறினார்.


இவ்விழாவில் திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பேச்சுப் பயிற்சி பெற்று வரும் 99 குழந்தைகளில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இவ்விழாவில் பங்கேற்றனர். மேலும் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் நேரு, மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அருண் ராஜ், அரசு மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் அர்ஷியா பேகம், காது மூக்கு தொண்டை துறையின் தலைவர் பழனியப்பன், மயக்கவியல் நிபுணர் மோகன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மாணவிகள் செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்