கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு விசாரணை ஆஜராக உத்தரவிட்டு போலீசார் இன்று (நவம்பர் 25) சம்மன் வழங்கியுள்ளனர். அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, அவர் மீது 5பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை ஐஜி அந்தஸ்திலான காவல்துறை அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும், டிசம்பர் 22-ந் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையை காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி ஐபிஎஸ் கண்காணிக்க உள்ளார். இதனிடையே நேற்று 3 வருவாய்த்துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று அருள் விக்னேஷின் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, அவருக்கு விசாரணைக்கான சம்மனை வழங்கினார்.


Comments are closed.