ஈரோட்டில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைகளை இரவில் கழுத்தில் மாலையுடன் வந்த மர்ம நபர் இரும்புக் கம்பியால் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார். மேலும், ஈரோடு முனிசிபல் காலனி பகுதியிலுள்ள திமுக கட்சி அலுவலக நூலகத்தையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதியின் சிலையில் இருந்த கண் கண்ணாடியை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதேபோல், மொடக்குறிச்சியில் உள்ள கருணாநிதியின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் அமைந்துள்ள நூலகத்தின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மணல்மேடு பகுதியில் உள்ள திமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தின் முகப்புக் கண்ணாடியையும் சேதப்படுத்தியுள்ளனர். ஒரே நாளில் கருணாநிதியின் சிலைகள் மற்றும் திமுகவுக்குச் சொந்தமான அலுவலகம், நூலகம் ஆகியவற்றைக் குறிவைத்து சேதப்படுத்திய சம்பவங்கள் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும் இதில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய கோரியும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Comments are closed.