Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தரப்பிற்கும் உரசல்…!

திருச்சி மாநகராட்சி ஆணையராக என்.பொன்மணி பணியாற்றி வருகிறார். நேரடி ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், இதற்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் தெற்கு மண்டல உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர். கடந்த செப்டம்பரில் தமிழக அரசு வெளியிட்ட இடமாற்ற அறிவிப்பைத் தொடர்ந்து இவருக்கு திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், திருவெறும்பூர் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான நவல்பட்டு விஜி ஆதரவாளர்கள் தரப்பிற்கும், மாநகராட்சி கமிஷனர் பொன்மணிக்கும் பேனர் அகற்றிய விவகாரத்தில் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாம் விசாரித்தோம். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் எம்.எல்.ஏவை வாழ்த்தி நவல்பட்டு விஜியின் ஆதரவாளர்கள் சில பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனை கமிஷனர் அகற்ற சொல்லியுள்ளார். 24 மணி நேரம் டைம் கொடுங்கள். நாங்கள் எல்லா ஃப்ளக்ஸ் பேனர்களையும் அகற்றி விடுகிறோம் என எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி ஊழியர்களை வைத்து உடனடியாக அனைத்து பேனர்களையும் அகற்றியதுடன், இந்த இடத்தில் அனுமதி பெறாமல் வேறு எந்த கட் அவுட்களும் வைக்கக்கூடாது எனவும் கூறியிருக்கிறார். இது எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., அவர் வெற்றிபெற்ற தொகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூட அனுமதிக்காதது எந்த விதத்தில் நியாயம்.

இதுவே திமுக, அதிமுகவினரிடையே தைரியமாக சொல்ல முடியுமா? திருச்சி மாநகர பகுதி என்றால் கூட பரவாயில்லை. கூட்ட நெரிசல், மக்களுக்கு தொந்தரவு எனலாம். யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி மீது உள்ள பாசத்தால் தங்களது ஆதரவை வெளிகாட்டும் வகையில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் பிளக்ஸ் வைத்துள்ளனர். எங்களை திருவெறும்பூரில் ஆணையர் அரசியல் செய்ய விடாமல் தடுக்கிறார். திருச்சி மாநகராட்சியில் எத்தனையோ வேலைகள் கிடப்பில் கிடக்கிறது. வரி வசூலிப்பது, புதிய வேலைகள் ஆரம்பிப்பது, மாநகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது என ஏகப்பட்ட வேலைகள் அணிவகுத்து காத்திருக்கின்றன. ஆனால், அதில் எல்லாம் தற்போதைய ஆணையரான பொன்மணி கவனம் செலுத்தாமல் மாநகரை தூய்மை செய்கிறேன் என்கிற பெயரில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனப்பான்மையில் தன்னிச்சையாக செயல்படுகிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பேனர்களை அகற்றிய இதே ஆணையர் மாநகரில் பல இடங்களில் மாநகராட்சி அனுமதி பெறாமல் ப்ளக்ஸ்களும், தனியார் விளம்பரங்களும் வைக்கப்பட்டுள்ளன. சிட்டியின் பல பகுதிகளில் சென்டர் மீடியன்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களிலும் விதிமீறல்கள் உள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் திருச்சியிலிருந்து 15கி.மீதொலைவில் உள்ள திருவெறும்பூரில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஆணையரின் செயல்பாடு இருக்கிறது. பிளக்ஸ் பேனர் அகற்றிய விவகாரத்தை எம்.எல்.ஏ நவல்பட்டு விஜியிடம் சொல்லி இருக்கிறோம். விரைவில் மாற்றம் நடக்கும் என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்