Rock Fort Times
Online News

பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை டாஸ்மாக் கடை முன்பு நிறுத்திய விவகாரம்: ஓட்டுநர், நடத்துநர் ‘சஸ்பெண்ட்’…!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தற்காலிகப் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் பேருந்தில் இருந்த நிலையிலேயே, சாலையோரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் இருந்த ஒருவர் கீழே இறங்கி மது வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர், பேருந்து டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பையும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நற்பெயரையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்ட காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்