தமிழகத்தில் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பதிவுத்துறை பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் ஆவண எழுத்தர்களின் உதவியின்றி தாங்களாகவே பத்திரங்களைத் தயாரித்து, ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆவண எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பதிவுத்துறை ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில், வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்குவோர் அதற்கான பத்திரங்களைத் தாங்களாகவே தயாரித்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்களுக்கான தனி நுழைவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலில், இணையதளத்தில் அடிப்படை விவரங்களை உள்ளீடு செய்து, தங்களுக்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். பின்னர், பதிவு செய்ய வேண்டிய ஆவண வகையைத் தேர்ந்தெடுத்து, நான்கு எளிய படிநிலைகளில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்தால், பதிவுக்குத் தேவையான வரைவு பத்திரம் தயாராகிவிடும். தொடர்ந்து, தேவையான விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பித்ததும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். இதனைப் பயன்படுத்தி அடுத்தகட்டமாக பத்திரப்பதிவுக்கான நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து, ஆன்லைனிலேயே முன்பதிவு டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த டோக்கனுடன் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பத்திரப்பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யலாம். இதன் மூலம் ஆவண எழுத்தர்களுக்காகக் காத்திருக்காமல் பொதுமக்களே தங்களது பத்திரங்களைத் தயாரித்து, பதிவு செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும் எனப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.