உலகெங்கும் வாழும் தமிழர்களால் போற்றி வணங்கப்படும் கடவுள் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த விசேஷங்களில் ஒன்று கந்த சஷ்டி பெருவிழா. இந்த பெருவிழா இன்று(10-11-2026) தொடங்கியது. அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. திருவிழாவிற்காக நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் முருகப்பெருமானுக்கு நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணியளவில் சுவாமி ஜெயந்தியாக பக்தர்களுக்கு காட்சி தந்த நிலையில், கந்தசஷ்டி பெருவிழா காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணிக்கு முருகப்பெருமானுக்கு உச்சிகால அபிஷேகமும், தீீபாராதனையும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல இதர அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் திருத்தணியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
திருச்சி வயலூர் முருகன் :
இதேபோல திருச்சியில் உள்ள வயலூர் முருகன் கோவில், ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது.
கந்த சஷ்டி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் வருகிற 15-ம் தேதி நடக்கிறது. திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கும் இந்த சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முதலே தொடங்கப்பட்டுள்ளது.

Comments are closed.