சமீபகாலமாக த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியிலும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சித் தலைமைக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருச்சி மாவட்டம், துறையூர் த.வெ.க எம்.எல்.ஏவும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீதான தாக்குதல் புகார் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கவும், தவறிழைப்பவர்களை நேரில் எச்சரித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நாளை (நவ. 11) அனைத்து எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குத் கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே துறையூர் சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க தவெக தரப்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள துணை சபாநாயகர் ரவிசங்கரே வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினராக இருப்பதால், இந்தப் புகாரை யார் விசாரிப்பார்கள் என்ற அமைப்பு ரீதியான கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்தத் தொடர் விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.