Rock Fort Times
Online News

தமிழகத்தில் ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள்: போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை…!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தன்று ஒரே நாளில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (10-11-2026) அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து
விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாக, அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தன. இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலவரம், அண்மைக் காலமாக நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், அவற்றின் மீதான விசாரணையின் முன்னேற்றம் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில், காவல் துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டால், அவற்றின் மீது எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்