தீபாவளிக்கு டாஸ்மாக் வசூல் என்பது சாதனை அல்ல, வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், மது விற்பனைத் தொகையை பெருமையாகப் பேசுவதால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 54% மதுபாட்டில்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும். இதற்கான முழுமையான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். தற்போது போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். இதற்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து மீள விரும்புபவர்களுக்கு முறையான ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.