திருச்சி, வயலூர் சாலையில் கார்-ஆட்டோ மோதல்: போலீசார் முன்னிலையில் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி வயலூர் சாலையில் நேற்று கார் மற்றும் ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில், தவறான நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடுரோட்டில் இரு தரப்பினர் சரமாரியாக அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வயலூர் சாலையில் நேற்று ஒரு இன்னோவா கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மூன்று பெண் பயணிகள் மற்றும் இரண்டு ஆண் பயணிகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.
கார் பிஷப் ஹீபர் கல்லூரி அருகே வந்தபோது, எதிர் திசையில் இருந்து அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, எதிர்பாராதவிதமாக காரின் மீது பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஆனால், விபத்தை ஏற்படுத்திய அந்த ஆட்டோ நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. விபத்து நடந்த அதிர்ச்சியில் காரை நிறுத்திய டிரைவர், தங்களை மோதிவிட்டுச் சென்ற ஆட்டோவுக்கு பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ டிரைவர்தான் விபத்துக்குக் காரணம் என தவறாக நினைத்துள்ளார். இதனால் அந்த ஆட்டோ டிரைவரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, நடுரோட்டில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
பொதுமக்கள் முன்னிலையில் இரு தரப்பும் மாறி மாறி அடித்துக்கொண்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து சண்டையை விலக்க முயன்றனர். ஆனால், கோபத்தின் உச்சியில் இருந்த இரு தரப்பினரும் போலீசாரையும் பொருட்படுத்தாமல், அவர்களைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சண்டை போடுவதிலேயே தீவிரமாக இருந்தனர். பின்னர் இரு தரப்பையும் போலீசார் விலக்கிவிட்ட அமைதிப்படுத்தினர். இந்த மோதல் சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.