Rock Fort Times
Online News

டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி: 160 ஊழியர்கள் பணியிடை நீக்கம்..!

முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 160 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் பணியாளர்கள் 960 பேருக்கு நேற்று விளக்கக் கேட்டு மெமோ வழங்கப்பட்ட நிலையில், 160 பணியாளர்கள் மீது இன்று நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இன்றும் கடைகளைத் திறக்காத பணியாளர்களுக்கு மீண்டும் மெமோ வழங்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தின்படி, அவற்றை ஒப்படைப்பவர்களுக்கு ரூ.10 வழங்கப்படுகிறது. இதற்காக, மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கவும், ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் க்யூஆர் குறியீடு மூலம் பணமில்லாப் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும்போது அவற்றை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு இரண்டு ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளர்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்