Rock Fort Times
Online News

திருச்சியில் கல்லறைத்திருநாள் அனுசரிப்பு: மறைந்த உறவுகளுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் அஞ்சலி..!

கிறிஸ்தவ மக்கள் மறைந்த தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறைத்திருநாளை அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, மறைந்த தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவற்றைச் சுத்தம் செய்து, வண்ணம் பூசி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்த வகையில், திருச்சி மேலப்புதூர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் இன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டனர். அங்கு தங்களது மறைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளில் மலர்களைத் தூவியும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தனர். மேலும், மறைந்த தங்களது முன்னோர்களின் நினைவுகளைப் போற்றும் வகையிலும், அவர்களின் ஆன்மா இறைவனின் அருளில் அமைதி பெற வேண்டியும் குடும்பத்தினருடன் இணைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கல்லறைத்திருநாளையொட்டி, கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று ( நவ. 02 )காலை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதேபோல், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கல்லறைத்திருநாள் அனுசரிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்