Rock Fort Times
Online News

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்த நிலையில் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை கைது செய்தது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி…!

திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.
இதற்காக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று (அக்டோபர் 26) தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையில் அவரை கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்