Rock Fort Times
Online News

மு.க.ஸ்டாலினுக்கு சீமான் திடீர் ஆதரவு: திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை… * அமைச்சர் வன்னி அரசு விளாசல்!

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தவெக அரசின் எதேச்சாதிகாரப்போக்கை கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியாரையே ‘மண்ணு’ என இழிவுபடுத்தியவர் சீமான். திராவிடக் கோட்பாட்டையும், சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும். அப்படிப்பட்ட கலைஞரை ‘தெலுங்கன்’ என்று கேவலமாக, அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான். அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் சீமான். இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்