Rock Fort Times
Online News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்? * நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை…!

தமிழகத்தில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர். தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்ய பாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தாராபுரம் தொகுதியில் 80.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு கழக ஒருங்கிணைந்த பயிற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய துணை ராணுவப்படை, ஆயுதப் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரு தொகுதிகளிலும் நாளை (09-10-2026) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். நாளை காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்கிற இறுதி நிலவரம் நாளை பிற்பகலில் தெரிந்து விடும்.
***

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்