வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் திருச்சி மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் உள்ள பிரதான வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை இன்று(05.10.2026) மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி ஐஏஎஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மண்டலம் 3 ,வார்டு எண் 44, தங்கேஸ்வரி நகர் முதல் கணேசபுரம் வரை 1270 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பொறியாளர்களுடன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநகரம் முழுவதும் வெள்ள பாதிப்புகளை தடுக்க மற்றும் சீரான நீர் ஓட்டத்தை உறுதி செய்ய ரூ.3.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதன்மூலம் 215.74 கி.மீ நீளத்திற்கு நாட்டு வாய்க்கால், சம்பா வாய்க்கால், கோட்டை வாய்க்கால், வெனிஸ் தெரு, வடக்கு ஆண் டார் தெரு, பட்டர்வொர்த் சாலை, மதுரா கார்டன் வாய்க்கால், எஸ்.எஸ்.நகர் வாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் வாய்க்கால், லயன் டேட்ஸ் வாய்க்கால், பூசாரித்தெரு வாய்க்கால், ரெட்டை வாய்க்கால்,
வசந்த நகர் உய்யக்கொண்டான் வாய்க்கால், கத்தரி வாய்க்கால், காத்தான் வாய்க்கால், செல்வநகர் வாய்க்கால், விருப்பாட்சிபுரம் வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்களும், நகரின் உட்பகுதிகளிலுள்ள பிற மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டு வருகிறது.
அகலமான மற்றும் பெரிய வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்ற நவீன தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் எக்ஸ்கவேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயந்திரங்கள் செல்ல முடியாத குடியிருப்பு பகுதிகள் மற்றும் குறுகிய உட்புற சாலைகளிலுள்ள சிறிய மழை நீர்வடிகால்கள் மனித ஆற்றல் மூலம் தூர்வாரப்படடு வருகிறது. டீசலில் இயங்கும் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. ஐந்து மண்டலங்களிலும் தலா இரண்டு மோட்டார் பம்புகள் ஒதுக்கப் பட்டுள்ளன. பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுவதை தடுக்க, ஆபத்தான மர கிளைகளை வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து வடிகால் பணிகளையும் முழுமையாக முடித்து, தடையற்ற நீர் ஓட்டத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.