பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் இன்று(05-10-2026) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டிப்ளமோ, பி.எஸ்.சி. நர்சிங் முடித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இதில் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அவர்கள் தரையில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுந்தரி, மாநில செயலாளர் ஜெயசூர்யா, பொருளாளர் சூர்யா ஆகியோர் தலைமை தாங்கினர். இதுகுறித்து மாநிலத் தலைவர் சுந்தரி கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 4.848 நலவாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். கர்ப்பகாலம் மற்றும் பிரசவ சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குடும்ப நலம், கருத்தடை மற்றும் பேறுகால சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வருகிற காலங்களில் நலவாழ்வு மையங்களில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதால், இடைநிலை சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

Comments are closed.