Rock Fort Times
Online News

துவரம் பருப்பு கொள்முதல் விலையில் அதிரடி மாற்றம்; ரூ.187 கோடி மிச்சப்படுத்திய தமிழக அரசு…!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம், தவெக அரசு மூன்று மாதங்களில் சுமார் ரூ.187 கோடி சேமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, முந்தைய அரசு கொள்முதல் விலையை விட கிலோவுக்கு ரூ.31 குறைவாக துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு கணிசமான அளவில் நிதிச்சுமை குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதலில் இதுபோன்ற விலை வேறுபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரே பொருளை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முடியும் என்ற நிலையில், முன்பு ஏன் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டது, அந்த விலை நிர்ணயத்திற்கான அடிப்படை என்ன, டெண்டர் நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன, போட்டித்தன்மை உறுதி செய்யப்பட்டதா உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைவாகக் கொடுத்து கடந்த மூன்று மாதங்களில் ரூ.187 கோடி அளவுக்கு தவெக அரசு மிச்சம் பிடித்துள்ளது. அதாவது கடந்த திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தவெக அரசு ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.31 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், கடந்த மூன்று மாத காலத்தில் செலவுத் தொகையில் ரூ.187 கோடி மிச்சம் பிடித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்கு திமுக ஆட்சியில் ரூ.654 கோடி செலவிடப்பட்டது. ஆனால் தவெக ஆட்சியில் ரூ.467 கோடி செலவிடப்பட்டு, ரூ.187 கோடி மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளுக்கு வழங்க 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விலை குறைந்தாலும் தரத்தில் எவ்வித குறையும் இல்லை என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்