Rock Fort Times
Online News

எல்.நினோ தாக்கம் குறைந்ததும் நல்ல மழை பெய்யும்… * இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நம்பிக்கை..!

திருச்சியில், தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காலநிலை மாற்றம் மற்றும் எல்.நினோ போன்ற வானிலை நிகழ்வுகள் மழைப்பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறை எல்.நினோவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழைப்பொழிவு குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலைமை சீரடைந்து நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். வளிமண்டலத்தின் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீண்ட கால காலநிலை மாற்றங்களைத் துல்லியமாக கணிப்பதில் சவால்கள் இருந்தாலும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட மாடல்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் கணிப்புகளை மேலும் துல்லியமாக மேற்கொண்டு வருகின்றனர். ககன்யான் திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே நோக்கம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான தொழில்நுட்பம் செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் தொழில்நுட்பத்தைவிட மிகவும் சிக்கலானது. வெப்பநிலை, ஏரோடைனமிக்ஸ், கட்டுப்பாட்டு அமைப்புகள், பாராசூட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கி சோதித்து வருகின்றன. ககன்யான் திட்டத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னோடி சோதனைப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தால், ககன்யான் திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகள் வேகமெடுத்து, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் விண்வெளித் துறையின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்பதால், இளைஞர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் தற்போதே ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். அவர்களின் ஆராய்ச்சிப் பங்களிப்பு இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை வேகப்படுத்தும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்