மத்திய அரசின் 20வது ரோஜ்கார் மேளா-51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை…* திருச்சி என்.ஐ.டியில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் சௌத்ரி பங்கேற்பு..!
மத்திய அரசின் 20-வது ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு விழா இன்று(19-09-2026) இந்தியா முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் ரோஜ்கார் மேளா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம், 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. திருச்சி மண்டல சுங்கத்துறை சார்பில், திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில், மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ் பூஷண் சௌத்ரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவிற்கு வருகை தந்தவர்களை திருச்சி மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் பி.வி.என். சுரேஷ் பாபு வரவேற்றார். தொடர்ந்து, மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ் பூஷண் சௌத்ரி, சுங்கத்துறை ஆணையர் பரத் பிரகாஷ், திருச்சி என்.ஐ.டி இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா மற்றும் பதிவாளர் டாக்டர் எஸ்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, புதிதாக மத்திய அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர்,”2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை எட்டுவதில் இளம் அரசு ஊழியர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக தெரிவித்தார். இந்திய இளைஞர்களின் திறமையும் திறன்களும் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதுமை, தொழில் முனைவு, திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகள் மூலம் இளைஞர்களுக்கு மேலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார். மேலும், புதிதாக அரசுப் பணியில் சேரும் இளைஞர்கள், தங்களது பணியை வெறும் அரசுப் பணியாக மட்டும் கருதாமல், மக்களுக்கான சேவையாகக் கருதி செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசு ஊழியர்களின் செயல்பாடுகளும் முடிவுகளும், வளர்ந்த இந்தியா” மற்றும் “தன்னிறைவு இந்தியா என்ற நாட்டின் இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், சுங்கத்துறை கூடுதல் ஆணையர் விஜயகிருஷ்ணவேலன், இணை ஆணையர் பாண்டியராஜ் மற்றும் சுங்கத்துறை, அஞ்சல்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், புதிதாக பணி நியமனம் பெற்ற இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.