Rock Fort Times
Online News

புதுக்கோட்டையில் விபரீதம்: கதவு திடீரென திறந்ததால் அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்து 10 மாணவிகள் காயம்… * ஓட்டுநர், நடத்துனர் ‘சஸ்பெண்ட்’

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்கு அரசுப் பேருந்துகள் மூலம் தினமும் சென்று வருகின்றனர். அதேபோல இன்று (02-09-2026) காலையும் வழக்கம்போல் மாணவிகள் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டனர். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிலர் படிக்கட்டு அருகே நின்று கொண்டு இருந்தனர். அந்த பேருந்து ரெங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது பேருந்தின் கதவு திடீரென திறந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில், படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்து கொண்டிருந்த மாணவிகள் 10 பேர் நிலைதடுமாறி ஒருவர் பின் ஒருவராக சாலையில் விழுந்து காயமடைந்தனர். அவர்களில் ஒரு மாணவியின் காலில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதில் காயம் அடைந்த 10 மாணவிகளும் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து கிராம மக்கள் திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்