திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சார்பதிவாளராகப் பணியாற்றியவர் கலா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு பணியில் இருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் ரூ.45 ஆயிரம் பணம் வைத்திருந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கலா தன்மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் சொந்த செலவுக்காக பணம் வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதிவுத்துறையின் தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக் கூடிய பண வரம்பு குறித்தும், இது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி, “பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கவேண்டும் என்பது குறித்த சுற்றறிக்கையைத் தாக்கல் செய்திருந்தாலும், அது பதிவுத்துறையால் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ அந்த சுற்றறிக்கை இல்லை என்றே தெரிகிறது.
எனவே, அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக் கூடிய ரொக்கப் பணத்திற்குப் பொதுவான வரம்பை நிர்ணயித்து ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், தமிழ்நாடு அரசு குறிப்பாக மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளரின் கருத்துக்களையும் இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அரசின் அனைத்துப் பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும் போது, இன்றைய சூழலில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தங்களது பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பணத்திற்கு, குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு தீர்வு காண வேண்டும். பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி புகழேந்தி ஒத்தி வைத்தார்.

Comments are closed.