2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப்பிறகு, கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளில் திமுக தலைமை மிகுந்த கவனமெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கட்சிப்பணிகளை எளிதாக்கவும், புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கவும் ஏற்கெனவே நிர்வாக ரீதியாக 77 கட்சி மாவட்டங்களாக திமுக பிரிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கையை தற்போது 110 ஆக அதிகரித்து கட்சித்தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் ஒருபகுதியாக, திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளும் ஏற்கெனவே மூன்று கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தன. இதில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளராக வழக்கறிஞர் கே.வைரமணி, தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளராக மாஜி முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாராஜன் ஆகியோர் பொறுப்பேற்று வந்தனர். இந்நிலையில் லால்குடி, மண்ணச்சநல்லூர் என்கிற இரண்டு தொகுதிகளையும் உள்ளடக்கி “திருச்சி கிழக்கு” என்கிற புதிய மாவட்டம் திமுகவில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்சித்தலைமையால் இது குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியானது முதலே தற்போதைய மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏவான கதிரவனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி திமுகவினர் பேசும்போது “திருச்சி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன் தேர்வாகவே வாய்ப்புகள் அதிகமுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே தொகுதிக்குள் நன்கு அறிமுகமான நபர். திமுக முதன்மை செயலாளரும், திருச்சி மாவட்ட திமுகவின் சீனியருமான கே.என்.நேருவின் குட்புக்கிலும் இருக்கிறார். தான் எம்.எல்.ஏ என்கிற எந்த பந்தாவும், பணக்காரன் என்கிற பகட்டும் இல்லாமல் கட்சிக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் எளிமையாக இவர் பழகி வருவதும், தொகுதிக்குள் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்திலும் பாகுபாடில்லாமல் கலந்து கொள்வதும் இவருக்கான ப்ளஸ் பாயிண்டுகளாக பார்க்கப்படுகிறது. அதேபோல கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் காசு பணத்தை கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்யக்கூடிய நபர், அனைத்திற்கும் மேலாக கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்து வழி நடத்திச்செல்லக் கூடியவர் போன்ற பல்வேறு காரணிகளால் எம்.எல்.ஏ கதிரவனுக்கே திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments are closed.