திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பாலகிருஷ்ணம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ப.கண்ணன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றி வந்த அவருக்கு எதிராக ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மருத்துவ விடுப்பு முடிவடைந்த பின்னர் மீண்டும் பணியில் சேர்வதற்கு உத்தரவு வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், பணியிடை நீக்கம் செய்யாமல் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியதாக தெரிகிறது. அப்போது இந்தப் பணியை செய்து தருவதற்காக ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேவதாஸ் ஆகியோர் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ப.கண்ணன் இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களின் ஆலோசனையின் பேரில், கண்ணனிடம் இருந்து ரூ.10,000 லஞ்சப் பணத்தை பெற்ற போது சந்திரசேகரன் மற்றும் தேவதாஸ் ஆகியோரை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில்
நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று (28.08.2026) திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார். அதில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேவதாஸ் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Comments are closed.