Rock Fort Times
Online News

பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறி ஆன்லைனில் கோடிக்கணக்கில் சுருட்டல்? * பெண் உட்பட 12 பேரை தட்டி தூக்கியது காவல்துறை..!

மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கட்டையம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தலைமையில் FQL, VG, MAINS APP உள்ளிட்ட செயலிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு உறுதுணையாக ரமேஷ், விஜய் ஆகியோர் இருந்துள்ளனர். இதில், FQL Trading Wallet என்ற செயலியில் ரூ.54 ஆயிரம் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தொடர்ந்து முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி, நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ரெட்டியபட்டி, வத்திபட்டி, விளாம்பட்டி, என்.புதுக்கோட்டை, பட்டனம்பட்டி, மூங்கில்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக முதலீடு செய்தவர்களுக்கு அமெரிக்க டாலர் கணக்கில் பணம் கிடைத்ததாகவும், இதனால் அவர்கள் தனது உறவினர்களையும், நண்பர்களையும் அந்த செயலியில் பணம் செலுத்த சொல்லி இருக்கின்றனர். இதன்மூலம் அந்த செயலியில் ஆயிரக்கணக்கான நபர்கள் பணம் செலுத்தினர். இதன்மூலம் அந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்த செயலியில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் நேற்று (ஆகஸ்ட் 28) காசம்பட்டியில் உள்ள ரமேஷ், விஜய் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ரமேஷின் வீட்டின் ஜன்னல் மற்றும் குளிர்சாதனப் பெட்டியை சேதப்படுத்தியதாககூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணைக் கண்காணிப்பாளர்கள் சங்கர், சுரேஷ் பாண்டியன் மற்றும் நத்தம், மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து முறையாக புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் . அதன்பேரில், நேற்று முதல் இன்று வரை 7,000-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடி சம்பவம் மதுரை, மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்