“போர் அடிக்கிறது என்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல நாம்; போராட வந்தவர்கள்”…* திமுக செயற்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று(22-08-2026) நடைபெற்றது. தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கள ஆய்வு செய்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மூத்த நிர்வாகிகள் குழு அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து முக்கிய 9 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ”நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம். நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். எந்தத் தனிமனிதரின் தவறாக இருந்தாலும் – அதனால் பாதிக்கப்படுவது 75 ஆண்டு கால கழகம் தான். தோல்விக்கு பிறகு, எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதை விட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்தவகையில் கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த மாறுதல்கள் அடுத்த நூறாண்டுக்கு கழகம் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும்.
ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம். கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியை பெற முடியும். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கட்சி சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். மாறுதலுக்குத் தயார் ஆகாமல் வெற்றி பெற முடியாது. எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில் அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது. ஒரு எம்.எல் .ஏ.மட்டுமே வலிமையாக இருந்தால் அந்தத் தொகுதியில் வென்றுவிட முடியாது. ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக செயல்படும்போதுதான் இயக்கம் வளரும்; வாழும்.
இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மக்களுக்காக உழைக்காமல் – போராட்டம் நடத்தாமல் – கொள்கை இல்லாமல் – நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமல் – ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை பார்த்து நாமும் அப்படி ஆக முடியாது – ஆகிடவும் கூடாது! அதபோன்று நாமும் கட்சியை நடத்தலாம் என்று நினைக்கவே கூடாது. நாம் நிரந்தரம்! நாம், போர் அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள இல்லை – போராட வந்தவர்கள்! வெற்றி தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கப் போவது இல்லை. கம் பேக் கொடுப்பதில் நாம் “ஸ்பெசலிஸ்ட்” சிறப்பாகக் கொடுப்போம்!
இப்போதைய முதலமைச்சர் நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார். சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். நம்மை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர்கள் நாம். இனமும் – மொழியும் – நாடும் இருக்கும் வரை கருப்பு சிவப்புக் கொடிபறக்க வேண்டும் என்ற நினைப்புடன் நாம் உழைக்க வேண்டும். அப்படி, உழைக்கத் தேவையான உடன்பிறப்புகளைக் கழகத்தில் அதிகம் சேர்க்க வேண்டும். எல்லாரும் சேர்ந்து உழைப்போம்! பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை – தமிழினத் தலைவர் கலைஞர் வளர்த்த இயக்கத்தை இன்னும் வலிமை கொண்டதாக வளர்த்தெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.