Rock Fort Times
Online News

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு: முதலமைச்சர் விஜய் இரங்கல்…!

தமிழ் திரையுலகின் மூத்த நடிகையும், பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞருமான சௌகார் ஜானகி (94) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று(21-08-2026) காலமானார். கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி, தெலுங்கு திரைப்படமான ‘ஷவுகாரு’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியால் அவருக்கு “சௌகார்” என்ற அடைமொழி நிலைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 400 திரைப்படங்களில் நடித்தார். இரு கோடுகள், புதிய பறவை, எதிர்நீச்சல், உயர்ந்த மனிதன், காவியத் தலைவி, தில்லு முல்லு உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். திரையுலகிற்கான அவரது நீண்டகால பங்களிப்பை பாராட்டி, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் இரங்கல்

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகி மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்