எல்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கினால் நிதி நெருக்கடி? உங்க ஆட்சியில் கார் ரேஸ் மட்டும் நடத்தலாமா?* தி.மு.க.வுக்கு த.வெ.க பதிலடி..!
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று(21-08-2026) பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனம் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சரே தெரிவித்துள்ளதால், முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அறிவுத்தலின்படி, திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் வழங்கும் வாகனத்தை பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவை குறைக்கும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வாகனம் வழங்க வேண்டும் என அரசின் கவனத்தை ஈர்க்கிறேன்” என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் பதிலடி,
அரசு சார்பில் எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்குவது தொடர்பாக விமர்சித்த தி.மு.க.,விற்கு த.வெ.க. ஐ.டி விங் பதிலடி கொடுத்துள்ளது. மக்களைப் பார்க்க எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?. ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா? ஆனால், இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவித்தப் பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா? கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப் போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை? கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா? இதுதான் தி.மு.க.,வின் இரட்டை வேடம் என த.வெ.க ஐ.டி விங் பதிலடி கொடுத்துள்ளது.

Comments are closed.