Rock Fort Times
Online News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்….!

மதுரை, திருப்பங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை(28-11-2026) தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக
அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய மரபுப்படியும், கால
வழக்கப்படியும், கார்த்திகை தீப திருநாளான 24.11.2026 ம் தேதி மலை மீது இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள தீபத்தூண் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. மதுரை மாநகர் மக்கள் மட்டும் அல்லாமல், கார்த்திகை தீபம் காண திரண்டு வந்த பக்தர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடுகளின்றி தீப தரிசனம் செய்து, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டினர்.
இந்தநிலையில் இன்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை அளவைக் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்ற திசைவழியில் தீர்ப்பு வழங்கி இருப்பது தமிழ்நாட்டின் அமைதி நிலை மீது நடத்தும் நேரடித் தாக்குதல் ஆகும். மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து வாழ்ந்து வரும் சுமூக நிலையை சீர்கெடுக்கும் முறையில் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்காவிற்கு சொந்தமான இடம் முருகன் கோவிலுக்கான இடம் என எல்லை பிரித்து பேசுவது, மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு துணை போகும் வாதமாகும். இது எந்த வகையிலும் ஏற்கதக்கதல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வழிவழியாக உள்ள அமைதியை பராமரித்து வந்த கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரை அறங்காவலராக நியமித்துள்ளதும், கோயில் மற்றும் தர்கா இரண்டுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மலை முழுவதுமான பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருப்பது கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்க்கும் கருத்தாகும். அது, தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கி சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பின்மை அடிப்படைகளை தகர்க்கும். இந்த தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, அறிவியலுக்கு புறம்பான, சட்ட நடைமுறைகளுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை (நவம்பர் 28) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்