ரயில் பயணங்களின் போது திடீரென விபத்து நேரிட்டால் மீட்புப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது? பயணிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி, ரெயில்வே குட்ஷெட் யார்டு பகுதியில் இன்று(21-08-2026) காலை நடைபெற்றது. அதன்படி, குட்ஷெட் யார்டு
வழியாக செல்லும் ஒரு பயணிகள் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2, 3 ரெயில் பெட்டிகள் கவிழ்வது போன்றும், கவிழ்ந்துகிடந்த ரெயில் பெட்டியில் தீப்பிடித்து புகை மளமளவென்று வெளியேறுவது போன்றும் ஒத்திகை பார்க்கப் பட்டது. மேலும், அதில் சிக்கிய பயணிகளை எவ்வாறு மீட்பது?, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்புவது போன்று தத்துரூபமாக ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர், ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் ரயில் பெட்டிகள் நிமிர்த்தப்பட்டு, தண்டவாளம் சீரமைக்கப்படுவது போலவும் ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி மிகவும் தத்ரூபமாக இருந்ததால் ஏதோ ரயில் தான் உண்மையாகவே கவிழ்ந்து விட்டதோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இது வெறும் ஒத்திகை என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Comments are closed.