Rock Fort Times
Online News

உதயநிதியை நாளை சட்டமன்றத்துக்குள் வரவிடாமல் தடுக்கவே கைது நடவடிக்கை… -மு.க.ஸ்டாலின் !

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி,
த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார். “நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார்.

காவிரி பிரச்சனையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் இன்று( ஆகஸ்ட் 4) காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய  பிறகு, ‘கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்’ என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு.

‘உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி! ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர். தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்