Rock Fort Times
Online News

‘ஜனநாயகன்’ இன்னும் பார்க்கவில்லை: படம் பார்த்த அமைச்சர்களிடமே கேளுங்கள்… அமைச்சர் வன்னி அரசு பதில்..!

‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை. படம் பார்த்த அமைச்சர்களிடமே அதுகுறித்து கேளுங்கள்” என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு, திருநெல்வேலியில் நடைபெற்ற மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் 27-வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாஞ்சோலை தொழிலாளர்களின் கோரிக்கைகள் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் கொள்கை ரீதியான முரண்பாடு இருப்பதாகவும் கூறினார். காவல் சித்திரவதை தொடர்பான சம்பவங்களில் தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்றும், இதனை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளதாகவும் கூறினார். அப்போது, ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்தீர்களா? படம் பார்க்கச் சென்ற அமைச்சர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் இன்னும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்க்கவில்லை. படம் பார்த்த அமைச்சர்களிடமே அதுகுறித்து கேளுங்கள்” என்று அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்