சோழர்களின் கட்டிடக் கலையை உலகுக்கு பறைசாற்றும் தஞ்சாவூர் பெரியகோவில், தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும். இந்த உலகப் புகழ்பெற்ற பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தின்போது, கதண்டுகள் (பெரிய வகை வண்டுகள்) தாக்கியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் பெரியகோவில் வளாகத்தில் இன்று (ஜூலை 23) சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது யாகக் குண்டத்திலிருந்து வெளியேறிய அடர்ந்த புகை, அருகிலிருந்த மரத்தில் இருந்த கதண்டுக் கூட்டின் மீது பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த கதண்டுகள் கூட்டமாக பறந்து, கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்களை தாக்கின. இந்த தாக்குதலில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பக்தர்கள் மயக்கமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து கதண்டுக் கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.