Rock Fort Times
Online News

தூத்துக்குடியில் பரபரப்பு… போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜனின் மகன் அருணாச்சலம் (26). இவர் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், டாஸ்மாக் கடை மூடப்பட்ட பின்னர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 17-ம் தேதி தென்பாகம் போலீசார் அருணாச்சலத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணைக்காக அருணாச்சலத்தை தென்பாகம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 23) காலை அருணாச்சலம் உயிரிழந்தார். இதனிடையே, போலீசார் தாக்கியதாலேயே தனது மகன் உயிரிழந்ததாக அருணாச்சலத்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அருணாச்சலத்தின் தாயார் பரமேஸ்வரி கூறுகையில், “எனது மகனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தனர். அப்போது அவர் கீழே விழுந்து காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் எனது மகன் போலீசார் தாக்கியதாக தெரிவித்தான். எனது மகன் உயிரிழப்புக்கு நீதி வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மேலும், அருணாச்சலத்தின் உறவினர்களும், விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதாக குற்றம்சாட்டி, உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அருணாச்சலம் விசாரணையின் போது மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதித்ததாக தூத்துக்குடி டி.எஸ்.பி. சுனில் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்