தெருநாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெருநாய் பிரச்சினை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளும் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தெருநாய் கடியால் குழந்தைகள் தினமும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டது. மேலும், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியது. கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், வெறிநோய் (ரேபிஸ்) பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நாய்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் மாநில உயர்நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தெருநாய்கள் சுதந்திரமாக உலாவுகின்றன. சிறுவர்கள், சிறுமிகள் தினமும் தெருநாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தடுக்க தமிழக அரசு எந்தவித பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Comments are closed.