‘விலகல்’ முடிவோடு சென்னையை நோக்கி படை எடுக்கும் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள்… அதிமுக தலைமை அலுவலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததோடு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக தலைமை எடுத்த தவறான முடிவே காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். மேலும், அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். சட்டமன்றத் தேர்தலில் தோல்வி காரணமாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அ.தி.மு.க. 2-ஆக உடைந்து மீண்டும் ஒன்றிணைந்தது. இருப்பினும் சி.வி.சண்முகம் மட்டும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சி.வி.சண்முகத்திற்கு பதில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பசுபதியை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. மேலும் இருதரப்பினர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டார்மங்கலத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் சி.வி.சண்முகம் தரப்பினருக்கும், பசுபதி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூண்டோடு விலகல்,
இந்தநிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விலகல் கடிதம் அளிக்க சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், தற்போது 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.