தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன் நிதித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி, லாஸ்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச்சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த மாத வாய்தாவின் போதும் மரிய வில்சன் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் குற்றப்பத்திரிகையை நேரில் பெற இன்று(04-07-2026) நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சேரலாதன் உத்தரவிட்டார். ஆனால், இன்றும் மரியவில்சன் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் சிவக்குமார், நீதிபதி சேரலாதனிடம், தமிழகத்தில் பட்ஜெட் பணிகள் நடந்து வருவதால், மரியவில்சன் நேரில் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார்.
அதனை ஏற்ற நீதிபதி, வருகிற 6-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என கூறினார். வழக்கறிஞர் மேலும் கால அவகாசம் கேட்டதால் 10-ம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் மரியவில்சன் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Comments are closed.