Rock Fort Times
Online News

திருச்சியில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…* அமைச்சர் ரமேஷுக்கு கோரிக்கை !

திருச்சி மாவட்ட சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை தலைமை நிர்வாக அறங்காவலர் பெ.அய்யாரப்பன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை
அமைச்சருமான ரமேஷுக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலங்கள், புறவழிச் சாலைகள் மற்றும் மாற்றுச் சாலைத் திட்டங்கள் அனைத்தும் கடந்த வருடங்களில் சம்மந்தப்பட்ட துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை, மண் பரிசோதனை செய்யப்பட்டும் தற்போதுவரை நிலுவையில் உள்ளது. ஒரு சில பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. திருச்சி,
சிந்தாமணி ஓடத்துறை முதல் கரூர் சாலை வரை (காவேரி நகர் உயர்மட்ட மேம்பாலம்) மாநில நெடுஞ்சாலைத்துறை சம்மந்தப்பட்டது. சந்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பழைமையான குடமுருட்டி பாலத்தின் ஸ்திரத் தன்மையை கருத்தில் கொண்டும் மேற்கண்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் நிலுவையில் உள்ளது. தலைமை தபால் நிலையம் முதல் புத்தூர் 4 ரோடு வரை உயர் மட்ட மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத் துறை திருச்சி மாநகராட்சி சம்மந்தப்பட்டது. திருச்சியின் மையப் பகுதியான தலைமை தபால் நிலையம், தந்தி அலுவலகம், நீதிமன்றங்கள், மாநகராட்சி அலுவலகம், வானொலி நிலையம், பள்ளிகள் அமைந்துள்ள இந்த முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவசர ஊர்தி வாகனங்கள் விரைந்து செல்லவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டு மேற்கண்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் நிலுவையில் உள்ளது.

இதேபோல திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா முதல் சோமரசம்பேட்டை சுண்ணாம்புகாரன் பட்டி வரை மாற்று சாலை (உய்யகொண்டான் கரைவழிச் சாலை) அமைக்கும் திட்டமும் நிலுவையில் உள்ளது. நொச்சியம்- அத்தாணி பிரிவு முதல் சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை, .திருச்சி பஞ்சப்பூர், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அந்தநல்லூர் பகுதியில் இணையும் சாலை பணிகள் முடிக்கப்படாமல் தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. மேற்கண்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்